Skip to main content

‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’-  நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு

நடிகர் ரஜினிகாந்த நேற்று தனது 70வது பிறந்தநாளை வழக்கம்போல கொண்டாடினார். அவருடைய ரசிகர்களும் வழக்கம்போல வெகு விமரிசையாக பல பிரபலங்களை அழைத்து விழா ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்டு  இயக்குனர் பி.வாசு பேசுகையில்,  “ஒரு சில ரசிகர் மன்ற விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விழா ஏனென்றால் ரஜினியின் எழுபது விழா.
 

p.vasu

 

 

நான்  ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறதே’ என்னும் படத்தில் ஸ்ரீதர் சாருக்கு  துணை இயக்குனரானேன். அப்போது ஸ்ரீதர் சார் அந்த படத்திற்கு வேறு இருவரைதான் மனதில் வைத்து எழுதியிருந்தார். அந்த சமயத்தில்தான் பதினாறு வயதினிலே படத்தை பார்த்து பரட்டை என்கிற கேரக்டர் யாருய்யா செமயாக நடித்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அபூர்வ ராகங்களில் ரஜினி சார் அந்த கேட்டை திறக்கும் ஸ்டான்ஸிலேயே தமிழுக்கு மிகப்பெரிய நடிகன் வந்துவிட்டேன் என்று தெரிவித்துவிடுவார். அச்சமயத்தில் ரஜினி சாரிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் யாரையும் போய் பார்க்க வேண்டாம், அவரைதான் பார்க்க செல்வார்கள். நான் ஸ்ரீதர் சாரிடம் இளமை ஊஞ்சல் ஆடுகிறதே படத்திற்கு ரஜினியும் கமலும் செட் ஆவார்கள் என்று சொன்னேன். அவர் உடனே,  ‘சரி அப்போ போய் நீ அழைச்சிட்டு வா’ என்று சொல்லிவிட்டார். நான் அதுவரை ரஜினி சாரை நேரில் பார்த்ததில்லை, சினிமாவில் பார்த்தது மட்டும்தான். அவர் அப்போது புதுப்பேட்டையில் வசித்து வந்தார், அவருடைய வீட்டுக்கு சென்று,  ‘நான் ஸ்ரீதர் அஸிஸ்டெண்ட் உங்களை பார்த்து அழைத்து வரச்சொன்னார்’ என்றேன். உடனடியாக காரை எடுத்துக்கொண்டு என்னுடன் கிளம்பினார் ரஜினி. அதன்பிறகு அந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினி தேர்வானார். நான் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்ததைவிட, முழுக்க முழுக்க ஒரு ரசிகனாகதான் அவரை பார்த்தேன். 

அடுத்த நாள் என்ன ஷூட் என்று தினசரி விசாரிப்பார். அதுபோல ஒருநாள் என்னிடம் கேட்க, ‘ஒன்னும் பெரிசா இல்ல, செக் புக்ல கையெழுத்துப் போடுற மாதிரிதான் சார்’ என்று சொன்னேன். அவர்,  ‘வெறும் கையெழுத்துதானா’ என்று கேட்டார். அடுத்த நாள் ஷூட்டில் இயக்குனரிடம் ரஜினி,  ‘சார் நான் இங்கிருந்து நின்னுகிட்டே அவங்களுக்கு கையெழுத்துபோடட்டும்மா’ என்று கேட்டார்.  இயக்குனருக்கும் ஒன்னும் புரியவில்லை, எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆமாம், இரண்டடி கேப் இருக்கும் அப்படி கெயழுத்துபோடுறேன் சொன்னா யாருதான் யோசிக்க மாட்டங்க. ஷூட் தொடங்கியவுடன் சட்டென்று என்று பேனாவை நீட்ட, அந்த பேனா அந்த செக் புக் வரை நீண்டது. அப்படியே கையெழுத்திட்டார். பின்னர் சட்டென்று இழுக்க பேனா மூடிக்கொண்டது. அப்படி ஒரு சின்ன கையெழுத்திற்கு கூட வீட்டிற்கு சென்று ஹோம்வொர்க் செய்தவர் ரஜினி சார். அதுபோல இருக்கின்ற ரஜினி சாரை அப்போதிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை இயக்கும் வாய்ப்பு பணக்காரன் படத்தில் கிடைத்தது. அதற்காக அவரது வீட்டிற்கு சென்று பார்க்கப்போனேன். அங்கு போனால் அவர் ஒரு சின்ன கேண்டில் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் கண்ணாடிகள் அவருடைய முகம் ஆயிரம் பிரதிபலிப்பாக தெரிகிறது. ஏன் சார் இப்படி வச்சிருக்கிங்கனு கேட்டேன் அதற்கு அவர் சொன்னார். இந்த சாதாரன முகடம், தலைகணம் ஏறிவிடக்கூடாது என்பதற்காக என்னுடைய முகத்தை நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார். என்ன ஒரு அழகான வார்த்தை பாருங்க.

அதேபோல அந்த படத்தில் அழகான ஒரு காட்சி, அவர் ஊட்டிக்கு செல்வதுபோன்று இருக்கும். அப்போது அங்கே அவரை கொலை செய்ய வில்லன்கள் குரூப் வருவார்கள்.  அவர்களை அடித்துவிட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தமிழில் பேசுவார். ரொம்ப ஆடாதே திரும்பி போய்டு என்று வில்லன் சொல்வார். அதற்கு அவர்,  ‘இந்த மண் என்னை ஏத்துக்குச்சு, இந்த மக்கள் என்னை ஏத்துக்கிட்டார்கள். இனிமேல் வாழ்ந்தாலும் இங்கேதான், விழுந்தாலும் இங்கேதான். என் கடைசி மூச்சு இந்த மண்னில்தான், இனி ரிட்டையர்டே கிடையாது, இங்கே செட்டில்தான்’ என்பார்.  இந்த மண் அவருடைய மண் என்று அப்போதே சொன்ன விஷயம்தான். 
 

 

அதேபோல உழைப்பாளி படத்தில் ராதாரவி,  ‘யார் நீ’ என்று ரஜினியை பார்த்து கேள்வி கேட்பார். அதற்கு அவர்,  ‘நேற்று உழைப்பாளி, இன்று நடிகன் நாளைக்கு?’ என்று படிக்கட்டில் ஏறி போய்க்கொண்டே இருப்பார். இது 92 ஆம் ஆண்டே சொன்ன விஷயம். அவர் திடீரென்று கேள்விகளெல்லாம் கேட்பார். எதுக்கு சார் நாளைக்குனு சொல்லிட்டு படிமேல போக சொல்றீங்க என்று. அதற்கு நான் இனிமேல் நீங்க மேலேதாம் சார் போகணும் என்றேன். இதுக்குமேலலாம் இந்த லெவல்ல நிக்கவே கூடாது சார் என்று நாங்க அப்போவே சொல்லிட்டோம். 

நடிகர்களை இயக்குவது சுலபம், ஆனால் ஒரு ஸ்டாரை இயக்குவது என்பது ரொம்ப கடினம். அவருக்கு என்று தனி ஷாட்ஸ், பிலாக் என்று யோசித்து ரசிகர்களுக்கு பிடித்ததுபோன்று காட்ட வேண்டும். நீங்களெல்லாம் சந்திரமுகி படம் பார்த்திருப்பீர்கள், அனைவரும் ஜோதிகாவை சந்திரமுகியாக பார்க்குறீர்கள். ஆனால், உண்மையில் சந்திரமுகி ரஜினி சார்தான். அவர் மேக்கப் போட்டு அந்த கதாபாத்திரத்திற்கு தயாராகிவிட்டார் என்றால் அப்படியே வேறாக மாறிவிடுவார். பாபா படத்திற்கு முன்னாடி அவர் வேதனையில் இருந்தார். சந்திரமுகி படத்தை கொடுத்து அவர் எனக்கு வாழ்க்கை தந்தார், ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததாக சொல்வார்” என்றார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்