
தமிழ் சினிமாவில் 'தேவி', 'எல்.கே.ஜி', 'கோமாளி' என பல்வேறு படங்களை தயாரித்துள்ள நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். இப்போது ரவி மோகனின் ஜீனி, சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2, வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ உள்ளிட்ட படங்களை தயாரிக்கிறது. மேலும் தனுஷ் - மாரி செல்வராஜ் இயக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இது போக தனுஷ் - போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது மகள் பிரீத்தா கணேஷுக்கு லஷ்வின் குமார் என்வருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இத்திருமணம் இன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு திரை பிரபலங்கள் வரை கலந்து கொண்டுள்ளனர்.
திரைப் பிரபலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், சத்யராஜ், சிம்ரன், ராதிகா, வைரமுத்து, வெற்றிமாறன், சுந்தர் சி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன், பிரியா ஆனந்த், அமலா பால், அதிதி ஷங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் பங்கேற்றார். நேற்று இரவு மணமக்களின் சங்கீத் நிகழ்வில் சூர்யா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.