தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதானது, திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் சிவாஜிகணேசனுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக இந்த விருது வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலையில், வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய திரைப்படவிழா மேடையில் இந்த விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதே மேடையில் 2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்திற்காக தனுஷிற்கு வழங்கப்பட உள்ளது.