உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றானஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின்கீழ் அனுப்பப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' படம், சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷன் ஆனது. இந்த நிலையில் அந்த பிரிவில் வென்று ஆஸ்கர் விருதினை தட்டிச்சென்றுள்ளது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனிடையே தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் இரு குட்டி யானைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers), ஆவணக் குறும்படப் பிரிவில் போட்டியிட்ட நிலையில் அதுவும் தற்போது ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.
இந்த இரு படங்களும் இந்திய மொழி படங்களில் முதல் முறையாக ஆஸ்கர் விருதை வாங்கி சாதனை படைத்துள்ளதால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவிற்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கீரவாணி, ராஜமௌலி மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு பெருமைக்குரிய ஆஸ்கார் விருதைப் பெற்றதற்காக என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். பெருமைமிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், "தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளைப் பராமரித்து வரும் பழங்குடியினத்தம்பதிகள் பெள்ளி, பொம்மன் குறித்தான ஆவணக் குறும்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்', கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கலைஞர்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, "நாட்டு நாட்டு பாடல் வெறும் பாடல் அல்ல. இந்த வெற்றி மிகப்பெரியது. இந்த பிரம்மாண்ட வெற்றிக்காக படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மதன் கார்க்கி எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.