/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/491_19.jpg)
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினி, தனது எக்ஸ் பக்கத்தில், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாகதமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அரசு நியமித்த பிறகு ரஜினி ராஜேஷை நேரில் அழைத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)