லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட், சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதன் ஒரு பகுதியில் அவர் பேசியதாவது, “கலாநிதி மாறன் சாரிடம் நான் முதலில் நிறைய பேசுவேன். இப்போ பேசுறது கிடையாது. ஏன்னா, அவரைப் பத்தி நிறைய தெரிஞ்சுகிட்ட பிறகு மரியாதை ஜாஸ்தியாகிடுச்சு. எப்போ ஒருத்தர் மேல மரியாதை ஜாஸ்தியா ஆகுதோ, அவர்கிட்ட நம்ம பேசறத கம்மி பண்ணிக்கன்னும். அவர் கதை கேட்டால், எந்த ரியாக்ஷனும் கொடுக்காம சில சஜெசன் மட்டும் கொடுத்துட்டு போய்டுவார். இந்த படக் கதை கேட்டவுடன், இந்த படம் பான் இந்தியா படமாக இருக்கனும்னு லோகேஷிடம் சொன்னார்.
லோகேஷ் கனகராஜ்... அவரது முதல் படம் மாநகரம் நல்ல ஹிட். அதுக்கப்புறம் எதுவுமே காணோம். பின்பு கைதி படம் நல்லா போய்டிருக்குன்னு சொன்னாங்க. யாரு டைரக்டர்னு கேட்டா, லோகேஷ் கனகராஜுன்னு சொன்னாங்க. படம் பார்த்து உடனே ஃபோன் பன்னி, மத்தவங்க யாரும் முந்துறதுக்கு முன்னால இங்க வாங்கன்னு சொன்னேன். எனக்கு எதாவது சப்ஜெக்ட் வச்சிருக்கீங்கலான்னு கேட்டேன். சார், உங்களுக்கு இல்லாத சப்ஜெக்டா வச்சிருக்கேன் சார். ஆனால் ஒன்னு சொல்றேன், நான் கமல் ஃபேன் சார்னு சொன்னார். அது என்னமோ தெரியல நம்ம ராசி அப்படியிருக்கு. நெல்சன் வந்தார், நல்ல காஃபி கிடைக்குமான்னு கேட்டார். இவர் கதை சொல்ல சொன்னா, நான் கமல் ஃபேன்னு சொல்றார். நீங்க யார் பேன்னு நான் கேட்டனா. அதாவது சூட்சமமா, பஞ்ச் டயலாக் இல்லாம அறிவுபூர்வமா நடிக்கனுன்னு சொல்றார்.
பின்பு கதை சொன்னார். பஞ்சு அருணாச்சலத்துக்கு அப்புறம், இப்படி ஒரு கதை இவர் சொன்னார். இண்டர்வல் வரை சொன்னவுடன் அப்புறம் என்னாச்சு என கேட்டேன். இண்டர்வல் வரையும் தான் பன்னியிருக்கேன், 15 நாள் டைம் கொடுத்தால் டெவலப் பன்னிருவேன்னு சொன்னார். சரின்னு சொன்ன பிறகு கமல் போன் பன்னார். ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கு, இன்னும் 40 நாள் ஷூட் இருக்கு, அது முடிச்சவுடன் லோகேஷை உங்களுக்கு அனுப்புறேன்னு சொன்னார். அந்த படம் விக்ரம். படம் வெளியாகி நல்லா போய்டிருக்கு. ரிலீஸூக்கு அப்புறம் லோகேஷை ஆளையே காணோம். நானும் வேற படம் ஸ்டார்ட்பன்னிட்டேன்.
ஒரு நாள் அனிருத் வந்து லோகேஷிடம் கதை கேட்குறீங்களான்னு கேட்டார். நான் முதலே கேட்டேன், வரன்னு சொன்னவர் இன்னும் வரலைன்னு சொன்னேன். இல்லை, இந்த முறை முழுக் கதை வச்சிருப்பதாக சொன்னார். உடனே கூட்டிட்டு வாங்க இந்த வாட்டி விடக்கூடாதுன்னு சொல்லி அழைச்சிட்டு வரச்சொன்னேன். வந்து கதை சொன்னார். கதை கேட்டவுடன், எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, பக்காவான வில்லன் கேரக்டர் எனக்கு. சந்திரமுகி படத்துல 9 நிமிஷம் வில்லனா நடிச்சேன். படம் ஹிட். அதனால் இந்த படமும் சூப்பர்னு நினைச்சேன். அப்புறம் ஒரு மாசம் கழிச்சு வந்தார். அந்த கதைக்கு நிறைய ஆர்டிஸ்ட் வேணும். அதனால வேறொரு கதை வச்சிருக்கேன்னு சொன்னார். அதுதான் கூலி. அப்போது தேவான்னு டைட்டில் வச்சிருந்தார்.
படத்தில் ஒரு முக்கியமான ரோலுக்கு ஃபகத் ஃபாசிலை செலக்ட் பன்னி வச்சிருந்தோம். ஆனால் அவர் ரொம்ப பிஸி. அதனால் யாரை நடிக்க வைக்கலாம் என யோசிச்சோம். அந்த கேரக்டருக்கு சரியான நடிகர் அமையவில்லை என்றால் படம் ஒர்க்காது. அப்புறம் சௌபின் ஷாஹிரை அழைச்சிட்டு வந்தார். எதில் நடிச்சிருக்கார் என கேட்ட போது மஞ்சுமல்ல பாய்ஸ்னு சொன்னாங்க. எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நல்ல ஆக்டர்னு லோகேஷ் சொன்னார். அவர் தைரியமாக சொன்னதால் நானும் சரி சொல்லிவிட்டேன்.
இன்னொரு கேரக்டருக்கு சத்யராஜை செலக்ட் பன்னி வச்சிருந்ததாக லோகேஷ் சொன்னார். அவரிடம் கேட்டீங்களான்னு கேட்டேன். கேட்டேன் சார், அவர் நடிக்குறன்னு சொல்லிவிட்டார், இருந்தாலும் ரஜினிகிட்ட கேளுங்கன்னு சொன்னதாக சொன்னார். சிவாஜி படத்தில் எனக்கு சரிசமமா சம்பளம் தரன்னு சொல்லியும் அவர் நடிக்கவில்லை. இதில் நடிக்கிறேன்னு சொன்னதே பெரிய விஷயம். அவர் மீது எனக்கு தத்துவ ரீதியாக முரண்பாடு இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முரையில் எதுவுமே இல்லை. உள்ளே இருப்பதை வெளிப்படையாக சொன்னால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உள்ளே ஒன்னு வச்சிக்கிட்டு பின்னால பேசுறவங்க இருக்காங்க. அதனால் சதயராஜ் நடிக்க ஓகே சொன்னது ரொம்ப சந்தோஷம்.
அவருக்கு பிறகு ஒரு லேடி கேரக்டர். ரொம்ப முக்கியமான கேரக்டர். யாரு நடிக்குறான்னு கேட்டப்போ ஸ்ருதிஹாசன்னு சொன்னார். அவங்ககிட்ட கேட்டீங்களான்னு கேட்டேன். உங்களுக்கு ஓகேணா அவங்களுக்கு ஓகே தான். உங்களுக்காக வெயிட் பன்றாங்கன்னு சொன்னார். நான் ஸ்ருதி நடிச்ச 3 படம், அப்புறம் இன்னும் இரண்டு படம் தான் பர்த்திருக்கேன். அவங்க கிளாமர் நடிகை, இந்த கேரக்டரை எப்படி பன்னுவாங்கன்னு கேட்டேன். அவங்க கமல் படத்துல நடிப்பதை விட உங்க படத்துல நடிக்கத்தான் ஆர்வமா இருக்காங்கன்னு சொன்னார். ஏன்னு கேட்டேன். கமல் ரொம்ப டென்ஷனான ஆள், ரிலாக்ஸாக இருக்க முடியாதுன்னு சொன்னார். அவர் நடிக்க ஒப்புகொண்டதில் சந்தோஷம்” என்றார்.