சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசியிருக்கின்றனர்.
இப்படத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., பா.ம.க. தலைவர் அன்புமணி, நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன், இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். சமீபத்தில் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதாக சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய ரஜினிகாந்துக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.