லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முன்னோட்ட விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாகர்ஜூனா, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரஜினி வீடியோ வடிவில் பேசினார். அவர் பேசியதாவது, "நான் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். அதனால் இந்த ஆண்டு முக்கியமானது. அதே போல லோகேஷ் கனகராஜுடன் நான் வேலை செய்த ‘கூலி’ படமும் முக்கியமானது. ராஜமௌலியைப் போலவே தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அவருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம். பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் இந்தப் படத்தில் என்னுடன் நடித்துள்ளார். 

நான் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தேன். உபேந்திரா ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். சௌபின் ஷாஹிர் வில்லன் ரோலில் நடித்துள்ளார். ஆமிர் கான் முதல் முறையாக தென்னிந்திய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இது சிறப்பானது. படத்தில் சைமன் கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலாக எழுதப்பட்டிருந்தது. முதலில் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பப்பட்டேன். ஆனால் லோகேஷ், சைமன் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார். அவர் நடிக்கிறார் என ஒப்புக்கொண்டது எனக்கு ஷாக்காக் இருந்தது. அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் பணத்திற்காக ஒப்புக்கொள்ளவில்லை. நல்ல வேலை காரணமாக ஒப்புக்கொண்டார். 

நாகர்ஜுனாவுடன் தாய்லாந்தில் 17 நாட்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது எளிமை, மற்றும் உடற்பயிற்சி சூத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது கதாபாத்திரமான சைமன், பாட்ஷா மற்றும் ஆண்டனி கதாபாத்திரத்தைப் போல என்றும் நினைவில் நிற்கும். அனிருத் இசையுடன் கூலி ஒரு பெரிய வெற்றிப் படமாக இருக்க வேண்டும்” என்றார்.

Advertisment