
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என முன்னணி நடிகர்கள் நடிக்க தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள படப்பிடிப்பு முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
இதனிடையே ஒரு தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினி, அரசியல் வருகை, அவரது உடல்நலம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "என்ன பேசணும் என்று அறிவு சொல்லிக் கொடுக்கும். எப்படி பேசணும் என்று திறமை சொல்லிக் கொடுக்கும். அனுபவம் சொல்லும் என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று. இன்றைய சூழலில் டெக்னாலஜியின் வளர்ச்சியால் எல்லோரும் பத்திரிகையாளர்கள் தான். அறிவியல் ஞானி மற்றும் மருத்துவர்கள் தான். எனக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தபோது அதற்காக தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் அரசியலுக்கு வரலாம் என திட்டமிட்டிருந்தேன். எதிர்பாராத விதமாக கரோனா இரண்டாவது அலை தொடங்கியது.
அரசியலுக்கு வருவேன் என பொதுவெளியில் சொல்லிவிட்டேன். அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்போது என் மருத்துவர் பொதுமக்களை சந்திப்பதோ, பிரச்சாரத்திற்கு செல்வதோ கூடாது என எச்சரித்தார். மீறி சென்றாலும் 10 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தார். கூட்டத்தில் தள்ளி நிற்பது என்பது சாத்தியம் இல்லை. இதை நான் எப்படி வெளியில் சொல்ல முடியும். அப்படி சொன்னால் ரஜினி பயந்துவிட்டார் என்று கூறுவார்கள். அப்போது இதனை மருத்துவரிடம் சொன்னபோது நானே சொல்கிறேன் என்றார்.
எண்ணங்கள் நன்றாக இருந்தால் தான் மனது நல்லாயிருக்கும். மனது நல்லா இருந்தால் தான் வாழ்க்கை நல்லாயிருக்கும். பிறந்ததிலிருந்து 70 முதல் 80 ஆண்டுகள் வரை இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. மனித உடல் ஒரு அற்புதமான படைப்பு. உடம்பில் பசி இருக்கிறது. அந்த பசிக்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக ரத்தத்தில் தேவையான சத்துள்ள பொருட்களை சாப்பாட்டில் கலந்து சாப்பிடுகிறோம். இன்றைக்கு எத்தனையோ விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்., அவர்களால் ஒரு துளி ரத்தத்தை உருவாக்க முடியுமா. முடியாது. இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் சிலர் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்து சிரிக்கிறதா அல்லது அழுகிறதா என்பது தெரியாது." என்றார்.