ராஜேஷின் உடல் நல்லடக்கம்

Rajesh's body buried

திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.

இந்த சூழலில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று முன் தினம்(29.05.2025) அதிகாலை காலமாகினார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்பட்டது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினி உள்ளிட்ட திரைபிரபலங்கள் என பலரும் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நாளை(01.06.2025) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அவரது மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வரும் வருவதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவரது மகள் நள்ளிரவு வந்துவிட்டதால் இன்றே ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செயப்பட்டது.

மதியம் 1 மணியளவில் அமரர் ஊர்தியில் ராஜேஷின் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. பின்பு அசோக் நகரில் உள்ள வெற்றி சிலுவை சர்ச்சில் ராஜேஷின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு இறுதி திருப்பலி செய்யப்பட்டது. தொடர்ந்து கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைக்கு அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்பு அங்கு அவர் ஏற்கனவே கட்டிவைக்கப்பட்ட கல்லறையில் அவரது உடல் ரஷ்ய நாட்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் போதே தனது உடல் அடக்கம் இப்படிதான் செயல்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அடக்கம் செய்யும் முன் அசோக் நகர் சர்ச்சில் பணிபுரிந்த முன்னாள் பாதிரியார் வந்து இறுதி வார்த்தைபேசினார். ராஜேஷின் அம்மா, அப்பா மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையிலே ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

actorrajesh
இதையும் படியுங்கள்
Subscribe