இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் கதை காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் பேனரில் கே.எல். நாராயணா தயாரிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisment

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இருப்பினும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தின் படப்பிடிப்பு முதலில் ஒடிசாவில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் நடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக்கானது. இதன் மூலம் பிரித்விராஜ் நடிப்பது தெரியவந்தது. லீக்கான காட்சிகளை அடுத்து படக்குழு படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. இதையடுத்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்ததாக தகவல் வெளியானது. இப்படத்தின் முன்னோட்டம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளதாக கடந்த மகேஷ் பாபு பிறந்தநாளில் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு நபர் முகம் மறைத்தபடி சிவனின் திரிசூலம், நந்தியின் சிலை அடங்கிய டாலரை அணிந்திருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் ராஜமௌலி கென்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முசலியா முடவாடியைச் சந்தித்துள்ளார். இதனை அந்த செயலாளர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, படம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநரான ராஜமௌலி, அவரது குழு 120 பேருடன்     கென்யா நாட்டிற்கு வந்திருக்கிறார். இங்கு கிட்டத்தட்ட அவரது புதிய படத்தின் 95 சதவீதமான படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான அந்த படம், கென்யாவில் படமாக்கப்படுவதால் எங்கள் நாட்டிற்கு பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படம் 120 நாடுகளில் வெளியாக திட்டமிட்டப்பட்டுள்ளதாக இதுவரை வெளிவராத ரகசிய அப்டேட்டையும் உடைத்துள்ளார். மேலும் இது குறித்து இப்படம் உலகளவில் பில்லியன் அளவு பார்வையாளர்களை  சென்றடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.