இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் கதை காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் பேனரில் கே.எல். நாராயணா தயாரிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இருப்பினும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தின் படப்பிடிப்பு முதலில் ஒடிசாவில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் நடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக்கானது. இதன் மூலம் பிரித்விராஜ் நடிப்பது தெரியவந்தது. லீக்கான காட்சிகளை அடுத்து படக்குழு படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. இதையடுத்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியானது. அடுத்ததாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் இன்று படத்தின் நாயகன் மகேஷ் பாபு பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையொட்டி ராஜமௌலி படம் தொடர்பாக ஒரு அறிவைப்பை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறுகையில், “நாங்கள் படப்பிடிப்பு தொடங்கி சிறிது காலம் தான் ஆகிறது. படம் தொடர்பாக நீங்கள் ஆர்வமாக அறிய விரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், இந்த படத்தின் கதை மற்றும் நோக்கம் மிகவும் பெரிதானது. வெறும் போஸ்டர்களோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகளோ அதற்கு நியாயம் செய்ய முடியாது. ஒரு ஆழமான உங்களை மிரளவைக்கும் உலகத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்படும். அது இதற்கு முன் நீங்கள் பார்த்திராத ஒன்றாக இருக்க முயற்சித்து வருகிறோம். உங்களின் பொறுமைக்கு நன்றி” என்றுள்ளார். 

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் மற்றொரு பதிவில், மீண்டும் நவம்பர் மாதம் முன்னோட்டம் வெளியாகும் என்பதை நினைவுபடுத்தி ஒரு போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் ஒரு நபரின் கழுத்து மச்ற்றும் நெஞ்சு பகுதி மட்டும் இடம் பெற்றுள்ளது. கழுத்தில் ரத்தம் வழிய நெஞ்சில் அணிந்திருக்கும் டாலரில் சிவனின் திரிசூலம் மற்றும் அவரது காளையான நந்தியின் சிலை இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அந்த முன்னோட்ட அப்டேட்டை நோக்கி படத்தின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Advertisment