/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/323_12.jpg)
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ஷங்கர் குறித்து பேசுகையில், “கேம் சேஞ்சர் படத்தை ஷங்கரின் முதல் தெலுங்கு படமாக பார்க்கவில்லை. ஏனென்றால் நம்மில் பலருக்கும் அவர் ஒரு தெலுங்கு இயக்குநர் தான். அவர் மீது தெலுங்கு சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
இன்றைய இயக்குநர்கள் பலரும் எதாவது புதிய முயற்சிகளை எடுக்கலாம். ஆனால் எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினல் கேங்ஸ்டர். அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த எங்களைப் போன்ற பலருக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். நமது கனவை திரையில் நம்பும்படி கொடுத்துவிட்டால் அதை பார்க்க மக்கள் திரளாக வருவார்கள் என்ற நம்பிக்கையை ஷங்கர் எங்களுக்கு கொடுத்தவர்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)