நாய் கடி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கட்டுக்குள் கொண்டு வர தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைத்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு நாய் பிரியர்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியது. இந்த தலைப்பை மைய்யமாகக் கொண்டு சமீபத்தில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சி பலரது கவனத்தை பெற்றது.
நிகழ்ச்சியில், தெருநாய்களுக்கு ஆதரவாக நடிகர் படவா கோபி மற்றும் நடிகை அம்மு பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக கடும் எதிர்வினையை சம்பாதித்து மீம்ஸ் டெம்ளேட்டாகவும் ட்ரோல் மெட்டிரீயலாகவும் ஆனது. பின்பு இருவரும் ட்ரோல் குறித்து வீடியோ வெளியிட்டனர். இதில் படவா கோபி, தன்னுடைய கருத்து யாரையாவாது பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றார். அம்மு, எங்க தரப்பில் எதுவுமே தெரியாதவங்களை வைத்து பேச வைத்திருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இருவரும் எடிட் பண்ணாத வெர்ஷனை ரிலீஸ் செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை ரோகிணி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மனிதநேயத்தை பற்றி பேசினார். அப்போது, தெருநாய் பிரச்சனையையும் குறிப்பிட்ட அவர், “இப்போதெல்லாம் நாய்களை பற்றி நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். ஆனால் மனித உயிர்களுக்காக கவலைப்படுங்கள் என்று காலங்காலமாக நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதற்காக சட்டங்களை ஏற்ற வேண்டும் என்கிறோம். சட்டங்கள் என்பது மனித மனங்களை மாற்ற இயலும். மனித மனங்களை மாற்றுவதற்கு கலை என்கிற மிகப்பெரிய ஆயுதம், இருக்கிறது. அதன் வழியாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.