தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி தற்போது, நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை ராகவா லாரன்ஸ் எடுத்துள்ளார். இவர் தற்போது கதிரேசன் இயக்கும் 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய 'லாரன்ஸ் அறக்கட்டளை' மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஆண்டுதோறும் தன்னுடைய பிறந்த நாளை ரசிகர்கள் மற்றும் அறக்கட்டளையில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி கொண்டாடவில்லை. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸ்," நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருப்பதால் எனது பிறந்தநாளை அனைவருடனும் கொண்டாடவில்லை. என் ரசிகர்களையும் நண்பர்களையும் சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன், ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வருவதற்கு ராகவேந்தரிடம் பிராத்தனை செய்கிறேன். எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி " எனக் குறிப்பிட்டுள்ளார்.