Skip to main content

"சமாதானமா? ... "சவாலா?"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்?

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

2017ஆம் ஆண்டு மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் பலரும் திரண்டு போராடினார்கள். அப்போது சில திரை பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸும் கலந்துகொண்டார் போராட்டத்தில் முன்னே நின்றார். போராட்டம் முடிவடைவதாக இருந்த கடைசி நாள் அன்று ராகவா லாரன்ஸ் சில அரசியல்வாதிகளை பார்த்ததாக புகைப்படங்கள் வெளியாகின. பின்னர், அன்று போராட்டத்தில் நடந்த கலவரங்களுக்கு ராகவா லாரன்ஸ், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர்தான் காரணம் என்ற வகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு மேடையில் குற்றம் சாட்டினார். அதற்கு ராகவா லாரன்ஸும் தகுந்த பதிலடி அப்போது தந்திருந்தார். இதற்கு பின் இவ்விருவரும் இதுகுறித்து மேடைகளில் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துகொண்டே வந்தனர். இந்நிலையில் இதற்கு தற்போது ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
 

lawrence

 

 

"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!" இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்!


அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து "அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்" என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் "நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?" என தெரிவித்திருந்தீர்கள்.... அதன் பிறகும்... இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன். ஆனால்..... 
 நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும்  எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்....  அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது...."எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும்  இல்லையே... பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்" என எனது நண்பர்களிடம் கேட்டேன்....அவர்கள் சொன்னது....."ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்"  என்றார்கள். அப்பொழுதுதான்  இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்! அதே சமையம்..... நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட  உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்! இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும்! "சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது" என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்...‌!


"என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்....ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்!"


"நீங்கள் என்னை  தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்" உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்.....  தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும்  நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்!  அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்! இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது.....நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால்.... மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்! இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது...கடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது! அதை மாற்றுத்திறனாளிகளான  எனது பசங்க என்னிடம் கூறி,  மிகவும் வருத்தப்பட்டார்கள்!  அதற்காகத்தான் இந்தப் பதிவு!


இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட  கூறுகிறேன்..... "எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால்... மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும்  என்னால் தாங்கிக் கொள்ள முடியாது! ஏனென்றால் "அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி!"


உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக  திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்! எனவே, உங்களுடைய "அந்த ஒருசில தொண்டர்களை" அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்! "பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்... அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது!"  "நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!" இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு  கொடுத்து வந்தால்....? எச்சரிக்கை தான்! அந்த எச்சரிக்கை என்னவென்றால்...? 

 

 


"எனக்கு இந்த அரசியல் எல்லாம் தெரியாது!"  "அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ!" "முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன்!" "டைரக்சன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,பிறகு கற்றுக்கொண்டேன்!" "படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,பிறகு கற்றுக்கொண்டேன்" "அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் "ஹீரோவாக்கி" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்!" "நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்...! "நான் சேவையை அதிகமாக செய்வேன்!" "மக்களுக்கு பேசுகிறவர்களை விட, "செயலில்"காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்!" "நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில்  அமர்ந்து நீங்கள் மக்களுக்கு  என்ன நன்மைகள் செய்தீர்கள்?  "நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்" என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல முடியாது!" 


"நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள், எனது தலைவனும், என் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள்... செய்தும் வருகிறார்கள்... அத்துடன் மனப்பூர்வமாக என்னை  வாழ்த்துகிறார்கள்....  ஆனால்... "நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்" அப்புறம் உங்களது "பெயரை" நான் இங்கு குறிப்பிடாமல்  இருப்பதற்கு காரணம்? "பயம்" இல்லை! நாகரிகம்தான் காரணம்! அது மட்டுமல்லாமல்...  "இது தேர்தல் நேரம் வேறு!" இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை! தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும்,  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.... "நான் சொல்வது சரி" என உங்களுக்கு தோன்றினால் "தம்பி வாப்பா பேசுவோம்!" என கூப்பிடுங்கள்.... "நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்....." உட்கார்ந்து..... மனம் விட்டு பேசுவோம்! "சுமூகமாகி" "அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்!" "நீங்களும் வாழுங்கள்! "வாழவும் விடுங்கள்!" இல்லை...... "இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்" என நீங்கள் முடிவெடுத்தால்.... அதற்கும் நான் தயார்!


"சமாதானமா?
 

 "சவாலா?"
 

 முடிவை நீங்களே எடுங்கள்!

"சாய்ஸ் யுவர்ஸ்...!"  அன்புடன்... உங்கள் அன்புத்தம்பி "ராகவா லாரன்ஸ்"

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்