Raghava Lawrence speech at Chandramukhi 2 Trailer Launch

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பி.வாசு, லாரன்ஸ், கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது ராகவா லாரன்ஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். படத்தில் ஒரு வசனம் இடம் பெறுகிறது. அந்த வசனத்தை பேசிவிட்டு, நான் நடந்து வந்து ஓரிடத்தில் நிற்க வேண்டும். அந்தக் காட்சியை நான் முதல் முறை நடிக்கும் போது.. பி வாசு குறுக்கிட்டு, 'ராகவா.. சார் தெரிகிறார். அதை தவிர்த்து விடுங்கள் அல்லது அதனை குறைத்து விடுங்கள்' என்றார். அதன் பிறகு அவரிடம் நான் அந்த நடையை நீங்கள் நடந்து காட்டுங்கள். உங்களைப் பார்த்து நான் நடிக்கிறேன் என்றேன். அவரும் ஒரு முறை நடந்து காட்டினார். பிறகு அதை போல் நடக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம், சார் நீங்கள் கூட ரஜினி சார் போலத்தான் நடக்கிறீர்கள் என்று சொன்னேன்.

Advertisment

எங்களிடமிருந்த சவாலே இதுதான். எங்களிடமிருந்து ரஜினியை பிரிக்க முடியவில்லை. இருந்தாலும் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும், நற்பெயர்களும் இயக்குநர் பி. வாசுவிற்கே சேரும். படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. வேட்டையன் கதாபாத்திரம் பேசும் அந்த வசனம்,தூய தமிழில் இருந்தது. நான் ராயபுரத்தில் பிறந்தவன். தமிழ் சுமாராகத்தான் தெரியும். தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன், முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன்'' என்றார்.