நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பயணித்து வரும் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்திலும் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து தனது ராகவேந்திரா புரொடைக்ஷன் சார்பில் உருவாகும் 2 படங்களை அறிவிக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் பின்பு தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாகும் என பகிர்ந்தார்.
இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலமாக நிறைய ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அந்த வகையில் சேவை என்ற அறக்கட்டளையின் மூலமாக ‘மாற்றம்’ என்ற பெயரில், கஷ்டப்படும் விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கவுள்ளதாக அறிவித்து, அதை செய்தும் முடித்துள்ளார். விழுப்புரம் தொடங்கி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கோயம்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தினருக்கு டிராக்டர்கள் வழங்கி, அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்க வேண்டும் எனத்தெரிவித்திருந்தார்.
இதனிடையே லாரன்ஸின் முயற்சிக்கு எஸ்.ஜே சூர்யா வாழ்த்து தெரிவித்ததோடு லாரன்ஸுடன் இணைந்து தானும் சேவை செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த், லாரன்ஸின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் ஓவியர் செல்வம் லாரன்ஸின் சேவையை பாராட்டி, ஆரத்தி தட்டில் சூடம் ஏற்றி, அதற்கடியில் ஸ்கெட்ச் பென்சிலை வைத்து சுவற்றில் லாரன்ஸின் முகத்தை வரைந்துள்ளார். மேலும் “மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ்” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ஓவியர் செல்வத்தின் திறமையை பாராட்டியுள்ளார். அந்த பதிவில், “வணக்கம் செல்வம் பிரதர், உங்கள் உழைப்பையும் திறமையையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோள், நீங்கள் சொன்னது போல், நான் மனித கடவுள் அல்ல. என் அன்பான மக்களுக்கு கடவுளின் சேவகன். உங்களது அற்புதமான திறமைகளுக்காகவும் எனக்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காகவும் விரைவில் உங்களை சந்திப்பேன்” என்றார்.