ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார் தயாரிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான அனிமேஷன் படம் ‘மகாவதார் நரசிம்மா’. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் ஐந்து மொழிகளில் 2டி மற்றும் 3டி வெர்ஷனில் வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் ரூ.100 கோடிகளை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட எந்த ஒரு அனிமேஷன் படமும் இந்தளவு வசூலிக்கவில்லை. இதன் மூலம் ரூ.100கோடி கிளப்பில் இணைந்த முதல் அனிமேஷன் என்ற பெயரை இந்த படம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநரான நடிகர் ராகவா லரன்ஸ், இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். தனது குடும்பத்துடன் சென்றதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த அவர், “ஒரு சக்திவாய்ந்த சினிமா அனுபவமாக இருந்தது. நான் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக பார்த்தேன். ஒரு பக்தராக, படத்துடன் ஆழமாக ஒன்றி இணைய முடிந்தது. பல காட்சிகளில் கண்ணீரே வந்துவிட்டது. இந்த படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை வாழ்த்துகிறேன். மேலும் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓட வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

லாரன்ஸ் தற்போது பென்ஸ், ஹண்டர், புல்லட் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் புல்லட் படத்தில் அவரது சகோதரர் எல்வின் நடிகராக அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.