
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கெளதம் மேனன் தற்போது சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார். சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கெளதம் மேனன் அடுத்தாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை 'வெந்து தணிந்தது காடு' படத்தைத் தயாரிக்கும் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' மற்றும் 'துர்கா' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். 'வெந்து தணிந்தது காடு' படத்தின் பணிகளை முடித்த பிறகு இயக்குநர் கௌதம் மேனன் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.