
சிவகங்கை மாவட்டம், கக்கனம்பட்டியை சேர்ந்த குமார்-முத்துக்கருப்பி என்ற தம்பதி, கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைத்த பணத்தை சேமித்து வைத்துள்ளனர். பின்பு அந்த பணத்தை ரூ.500 நோட்டுகளாக மாற்றி ஒரு தகர உண்டியலில் வீட்டினுள் குழி தோண்டி புதைத்து பத்திரமாக வைத்துள்ளனர். பின்பு குழந்தைகளின் காதணி விழாவுக்காக பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கரையான் அரித்து சேதப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் சேதமாகியுள்ளது. இதனால் செய்வதறியாது அந்த குடும்பத்தினர் தவித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த அம்மாவட்டத்தின் கலெக்டர், அக்குடும்பத்தினருக்கு உதவி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ விரும்புவதாக நடிகர், இயக்குநர் மற்றும் நடன அமைப்பாளர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளங்களில் தெரிவித்து அக்குடும்பத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் வேண்டுமென்று கேட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது அந்த குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர்கள் இழந்த ரூ.1 லட்சத்தை இப்போது அந்த தம்பதியினரிடம் கொடுத்து உதவியுள்ளார்.