திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ‘சேவையே கடவுள்’ என்ற அறக்கட்டளையின் மூலம் ‘மாற்றம்’ என்ற பெயரில் நடன இயக்குநர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ், ரூ.15 லட்சம் செலவில் புதிய கழிப்பறை கட்டிடம் கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா கடந்த 18ஆம் தேதி நடந்தது. இதில் ராகவா லாரன்ஸ், கே.பி.ஒய். பாலா மற்றும் பள்ளி, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் புதிய கட்டிட திறப்பு விழாவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்துடன் பேசினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அவர், “குழந்தைகளுக்கு சரியான கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் இல்லாததைப் பற்றிய பாலா, என்னிடம் சொன்னார். அவர் 2 லட்சம் நிதியுதவி கேட்டார், ஆனால் இந்த பிரச்சினையால் குழந்தைகள் பல தொற்றுநோய்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்ததும், என் மனம் உடைந்தது. அதனால் சரியான கழிப்பறை வசதிகளை உருவாக்க அவர்களுக்கு ரூ.15 லட்சம் நன்கொடை அளிக்க முடிவு செய்தேன்.
இந்த பங்களிப்பின் மூலம், பாலா, பழைய மாணவர்களின் ஆதரவுடன், மிகவும் தேவையான வசதிகளை உருவாக்கினார். பாலா மற்றும் பழைய மாணவர்களுக்கு எனது நன்றி. குழந்தைகள் கழிப்பறை வசதிகளால் பயனடைவதைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் கட்டிடத்தின் திறப்பு விழா, எனக்கு திருப்திகரமாக இல்லை. நான் ஏமாற்றமடைந்தேன். அதைப் பற்றி நான் இன்னொரு வீடியோவில் விரைவில் பேசுகிறேன்” என்றார். இதுவரை பல நலத்திட்ட உதவிகளை செய்த ராகவா லாரன்ஸ், இதுவரை திறப்பு விழாக்களில் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்ததில்லை. ஆனால் இம்முறை சொல்லியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதனால் என்ன காரணம் என்பதை அறிய அவரது உதவியை பாராட்டும் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.