தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகபிரபலமடைந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பின்பு இயக்குநராக அவதாரம் எடுத்து 'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தும் இருந்தார். இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்', 'அதிகாரம்' மற்றும் 'சந்திரமுகி 2' படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதில் ருத்ரன் படம் வருகிற 14ஆம் (14.04.2023) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அந்த விழாவில்,150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவை அவரே ஏற்றுள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரின் ஆசியும் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ். நடிப்பதை தாண்டி 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற அறக்கட்டளையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவசெலவுகள் உள்ளிட்ட பல நலத்திட்டஉதவிகளைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.