
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் புதுக்கோட்டை குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் போட்டியாளராகக் கலந்து கொண்டு வருகிறார். அதில் தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லை என்று தெரிவித்த அவர் அதை உருவாக்கித் தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை நடிகர், இயக்குநர் மற்றும் நடன அமைப்பாளர் ராகவா லாரன்ஸ் நிறைவேற்றினார்.
புதுக்கோட்டை குருக்களையாபட்டியில் குடிநீர் நிலையத்தை அமைத்துக் கொடுத்த லாரன்ஸ் இன்று அந்த ஊர் மக்களை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்க அம்மாவும் குடிநீருக்காக ரொம்ப தூரம் சென்று எடுத்து வருவார். அதனால் தண்ணீருடைய அருமை எனக்கும் தெரியும். நிகழ்ச்சியில் விஷ்ணு பேசுவதை பார்த்து நிகழ்ச்சி இயக்குநருக்கு ஃபோன் போட்டு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அவர் இவ்வளவு தொகை ஆகும் என ஒரு பட்ஜெட் சொன்னார். அதை ஏற்பாடு செய்து தற்போது கொடுத்துள்ளேன். இந்த குடிநீர் நிலையத்தில் இந்த ஊர் மட்டும் இல்லாமல் அருகில் இருந்த ஊர் மக்களும் பயனடைகிறார்கள். இதை பார்த்து இன்னும் நிறைய ஊர்களில் உதவி கேட்டுள்ளார்கள். முடிந்தால் செய்வேன்” என்றார்.
அவரிடம் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது, “தெலுங்கில் விஜய சாந்தியை சூப்பர் லேடி எனச் சொல்வார்கள். அதே போல் நயன்தாராவை கூப்பிடுவதில் தவறில்லை. அவரும் நிறைய சாதனைகள் பண்ணியிருக்கிறார். இப்போது வேண்டாம் எனச் சொல்கிறார். அது அவருடைய விருப்பம்” என்றார். பின்பு அவரிடம் சாதிய ரீதியிலான படங்கள் வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை திணிப்பது தவறு” என்றார்.