ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ், ஹண்டர், புல்லட் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் காஞ்சனா 4 படத்தை நடிப்பதோடு இயக்கியும் வருகிறார். இரண்டு பட படப்பிடிப்புகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திரைத்துறையைத் தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது வீட்டை இலவச கல்விபள்ளியாக மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காஞ்சனா நான்காம் பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாதி சதவிதம் முடிந்துவிட்டது. இந்த பட முன்பணத்தை வைத்து, எனது முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவசப் பள்ளியாக மாற்றியுள்ளேன். உங்கள் பலருக்கும் தெரியும், என்னுடைய படங்களுக்கு நான் ஒவ்வொரு முறையும் முன்பணம் பெற்ற பின் என் மனதுக்கு நெருக்கமான ஒரு சமூக அக்கறை முயற்சியை செய்வேன். இந்த முறை, எனது முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவசக் கல்விப்பள்ளியாக மாற்றியிருக்கிறேன். இந்த வீடு எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் நான் டான் மாஸ்டராக இருந்த போது, என்னுடைய சேவிங்ஸில் இருந்து வாங்கிய முதல் வீடு. பின்பு, அதை ஒரு அனாதை இல்லமாக மாற்றினேன். அப்போது நானும் என் குடும்பமும் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தோம். ஆனால் இன்று, என் குழந்தைகள் வளர்ந்து வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். இந்த வீட்டை மீண்டும் ஒரு நல்ல நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்த பள்ளியில் நான் நியமிக்கும் முதல் ஆசிரியர், என் அறக்கட்டளையில் வளர்ந்த பெண். அவர் இப்போது படித்த படிப்பை திருப்பி சொல்லிக் கொடுக்க தயாரகியுள்ளார். இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த புதிய முயற்சிக்கு உங்களது அனைவரின் ஆசீர்வாதங்களும் எனக்கு தேவை. நீங்கள் எப்போதும் போல, தொடர்ந்து எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றுள்ளார்.