/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/318_14.jpg)
நடிகர் மற்றும் நடனக் கலைஞர்கள் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘நாக் நாக்’. இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக் குமார், சனம் ஷெட்டி, லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நவீன் சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தை தேஜாவு, தருணம் போன்ற படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது ‘ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்’ நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கமே, திறமையான புதிய இயக்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களின் நல்ல கதைகளை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். 'நாக் நாக்' பார்த்தபோது, இது மிகவும் தனித்துவமான, தரமான உள்ளடக்கம் என்று எனக்கு தோன்றியது. அதனால் உடனடியாக இந்த படக் குழுவினருடன் இணைய முடிவு செய்தேன். இப்படி ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.
படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கூறிய ராகவ் ரங்கநாதன், “ஆம், நான் இந்தப் படத்தை எனக்காக எழுதினேன் - ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வழக்கமான ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. பெரிய பட்ஜெட்டில் ஹீரோ பறக்கும் காட்சிகளோ, மெதுவாக நடக்கும் காட்சிகளோ (அப்படி செய்ய எங்களிடம் பட்ஜெட்டும் இல்லை) இந்தப் படத்தில் இருக்காது. 'நாக் நாக்'கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது. கதையேதான் ஹீரோ” என்றார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)