Skip to main content

ஓடிடி தளத்தில் கால் பதிக்கும் நடிகை ராதிகா!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Raadhika

 

ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையின் மிகமுக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீளத் திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளைத் தயாரித்து வழங்கியுள்ள இந்நிறுவனம் தற்போது ஓடிடி தளத்தில்  'இரை' எனும் இணையத் தொடர் மூலம் தன் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இணையத் தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று ( ஜூலை 5,2021) பூஜையுடன் தொடங்கியது. தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்த இணையத் தொடரினை இயக்குகிறார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த இணையத் தொடருக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, சசி கலை இயக்கம் செய்கிறார். சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளைக் கவனிக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

 

ராடன் மீடியாஒர்க்ஸ் நிறுவனம் ஓடிடி தளத்தில் கால் பதிப்பது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், "எங்கள் ராடான் மீடியாஒர்க்ஸ் குடும்ப ரசிகர்களின் ரசனையை முதன்மையாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். கடந்த பல வருடங்களாகப் பொழுதுபோக்கு உலகின் பல்வேறு துறைகளில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் பல கதைகளை வழங்கி பல அற்புதமான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். பல வித்தியாசமான படைப்புகளை இந்த தலைமுறையிலும் வழங்க, இந்த வெற்றிகள் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது. ஓடிடி தளத்தில் எங்களது அறிமுக தயாரிப்பான “இரை” இணையத் தொடர் எப்போதும்போல குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் பொருந்திய அற்புதமான கதையாக இருக்கும். இந்த இணையத் தொடர் க்ரைம் திரில்லர் வகையில் உருவானாலும், உறவுகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும்" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்