சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர், நடிகை நயன்தாரா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குனர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகம் பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அப்போது ராதாரவி பேசியது: “ எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள். பின்னர் விட்டுவிடுவார்கள்.
நயன்தாராவே ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் யாரு வேண்டுமானாலும் சீதாவாக நடித்துவிட முடிகிறது. முன்பு சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைதான் தேடுவார்கள். அவரை பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்’ என்று ராதாரவி பேசியுள்ளார். இதனால் ராதாரவியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் பெண் நடிகைகளை குறித்து சர்ச்சை ரீதியாக பேசியுள்ளார்.