பிரஷாத் ராமன் இயக்கத்தில், ராதா ரவி, லிங்கா, சாய் தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாவூத்’. டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராகேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இப்படம் வருகின்ற 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி நடந்த படத்தின் விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் ராதாரவி பேசுகையில், “நான் இரண்டு காலில் ஆபரேஷன் செய்து இரண்டு வருஷம் பெட்ல இருந்தேன். சினிமாகாரன் எப்போதும் தூங்கும் போதுக் கூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும். இல்லைன்னா செத்துவிட்டோம் என வேற ஆளை நமக்கு பதில் நடிக்க போட்ருவாங்க. இந்த படக்குழுவினர் சிறப்பானவர்கள். இப்படத்தில் பேய் இல்லை, ஆனால் வெட்டுக்குத்து இருக்கு. ஏனென்றால் இது போன்ற படங்கள் தான் வெற்றி பெற்று வருகிறது. ஆளான பட்ட ரஜினி படத்துலையே வெறும் ரத்தமா இருக்கு. அவரே ரத்தத்தை நம்பி இருக்கும் போது, நம்மலாம் என்ன. பட ஆரம்பத்துல இருந்தே ரத்தத்தை காட்டலாம், தப்பில்லை” என்றார். ரஜினி - லோகேஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கூலி படம் ஏ சான்றிதழுடன் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.