ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ரூ.300கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரூ.400 கோடியை நெருங்கவுள்ளது. இதனிடையே இப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை ரச்சிதா ராம். அண்மையில் ரஜினியுடன் எடுத்திருந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.
இந்த நிலையில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா ராம். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த விமர்சனங்களாலும் அன்பாலும் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். மீடியாக்கள், விமர்சகர்கள், ட்ரோல்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் என அனைவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு ஸ்பெஷல் நன்றி. லெஜண்ட்ஸுகளுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். பட வெற்றிக்கு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.