
முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின், ‘அடங்காத அசுரன்’, ‘வாட்டர் பாக்கெட்’, ‘ராயன் ரம்புள்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 7ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில், ராயன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், தனுஷின் சகோதரர்களாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் சகோதரியாக துஷாரா விஜயன் வருகிறார்கள். காட்டில் ஆபத்தான மிருகம் சிங்கமா? ஓநாய்யா எனக் கேள்வி கேட்டு தொடங்குகிறது இந்த டிரெய்லர். அதிரடி சண்டை காட்சிகளோடு கமர்சியல் படமாக இப்படம் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், இப்படத்தில் தனது பணியை திறம்பட செய்திருக்கிறார் என்பதை இந்த டிரெய்லரின் மூலம் நமக்கு தெரிகிறது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.