
முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை (06-7-24) சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட இருக்கிறது. இந்த விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியிருக்கிறது. ‘ராயன் ரம்புள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பாடல், குத்து பாடலாகவும் ராப் (Rap) பாடலாகவும் இருக்கிறது. கேங்க்ஸ்டர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல், தீம் மியூசிக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவு எழுதி பாடியிருக்கும் இப்பாடலை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.