Skip to main content

"என்னுடைய முன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்"- நிச்சயதார்த்தம் குறித்து ராணா!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

rana daggubati


பிரபல தெலுங்கு பட சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா டகுபதி கடந்த 2010ஆம் ஆண்டு 'லீடர்' என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த நிலையில், 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் ராணாவின் தாத்தா பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு, சித்தப்பா நடிகர் வெங்கடேஷ் டகுபதி என்பது குறிப்பிடத்தக்கது. 
 


தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' என்ற படத்தில் நடித்துள்ளார் ராணா. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. கரோனா வைரஸ் பரவலால் படம் எப்போது ரிலீஸாகும் என்பதை அறிவிக்காமல் ஒத்திவைத்துள்ளது படக்குழு.

ராணா, சமூக வலைத்தளத்தில் திருமணத்திற்குத் தனது தோழி சம்மதம் தெரிவித்துவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து இரு வீட்டார் கலந்து கொண்டு பேசிய புகைப்படங்களையும் பகிர்ந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி. 
 

 

 


இந்நிலையில் கடந்த வாரம், நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராணா நேரலையில் பேசினார். இதில் ராணா எப்படி மிஹீகாவைச் சந்தித்தார், எப்படித் திருமணம் பற்றிக் கேட்டார் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி லட்சுமியின் கேள்விகளுக்கு ராணா பதிலளித்தார்.

அந்தப் பேட்டியில் திருமண முடிவு குறித்து முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் என்று ராணாவிடம் லட்சுமி மஞ்சு நையாண்டியாகக் கேட்டதற்கு, "நண்பர்களிடமிருந்து செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. எனது முன்னாள் காதலிகள் ஆசிர்வதித்தனர்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள்! - காடன் விமர்சனம்

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

vdsgvs

 

'மைனா' படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த இயக்குனர் பிரபு சாலமன், பின்னர் 'கும்கி' படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். காட்டு யானையின் அட்டகாசத்தை சமாளிக்கும் கும்கி யானையை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இதேபாணியில் மீண்டும் யானைகளை மையமாக வைத்து பிரபு சாலமன் உருவாக்கியுள்ள 'காடன்' திரைப்படம் அதே வரவேற்பை பெற்றதா...?

 

யானைகள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியை அழித்து அதை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியில் ஒரு பெரும் அரசியல் புள்ளி இறங்குகிறார். அவரை தடுத்து நிறுத்த கடுமையாகப் போராடுகிறார்கள் காட்டு மனிதரான ராணாவும், யானைகளும். அந்தப் போராட்டத்தில் ராணாவும், காட்டு யானைகளும் வெற்றி பெற்றனரா, இல்லையா..? என்பதே 'காடன்' படத்தின் கதை.

 

sfdgsd

 

மனித வளம் அழியாமல் இருக்க காடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை மையமாக வைத்து அதில் யானைகளின் பங்கு எந்த அளவு இருக்கிறது என்பதை வலியுறுத்தும் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். யானைகளின் வழித்தடங்களை அழித்தால் அவைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் என்ன, இதனால் காடுகளை சுற்றி வாழும் மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் என சமகாலப் பிரச்சனைகளை சரியாகக் கையிலெடுத்த இயக்குனர் அதற்கான திரைக்கதை அமைப்பதில் சற்று தடுமாறியுள்ளார். காடுகளின் உட்பகுதி அழகு, அதை விரிவுபடுத்தும் காட்சியமைப்புகள், ராணாவின் கதாபாத்திர தன்மை, மெய்சிலிர்ப்பூட்டும் ஸ்டண்ட் காட்சி, துல்லியமான ஒலி வடிவமைப்பு, ராணாவுக்கும் யானைக்குமான கெமிஸ்ட்ரி என ஆங்காங்கே தனித்தனியாக சில காட்சிகள் ரசிக்கவைத்தாலும், திரைக்கதையாகப் பார்க்கும்போது முகம் தெரியாத கதாபாத்திரங்கள், உச்சரிப்பு சரியாகப் பொருந்தாத வசனங்கள், இவரின் முந்தைய படங்களை நினைவுபடுத்தும்படியான காட்சியமைப்புகள், மனதுக்கு நெருக்கமாக மறுக்கும் உணர்ச்சியற்ற செண்டிமெண்ட் காட்சிகள், வேகத்தடையாய் ஒலிக்கும் பாடல்கள், படத்துக்கு பொருந்தாத காதல் காட்சிகள் ஆகியவை அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பிரபு சாலமன் படத்துக்கே உரித்தான நல்ல காமெடி காட்சிகள், அழகான பாடல்கள் ஆகிய இதில் மிஸ்ஸிங்!

 

vgsg

 

ஒரு பேன் இந்தியா படமாக இது உருவாக்கப்பட்டுள்ளதால் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் பரிட்சியமான முகம் நடித்தால் பொறுத்தமாக இருக்கும் எனக் கருதிய படக்குழு நாயகனாக ராணாவை தேர்வு செய்துள்ளனர். ராணா நன்றாக கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். ஒரு பக்கம் தோள்பட்டையை தூக்கிக்கொண்டு நடப்பது, குரங்குபோல் மரத்துக்கு மரம் தவ்விக் குதிப்பது, மிருகங்களுடன் சகஜமாகப் பேசுவது எனத் தனது உடல்மொழியால் காட்டு மனிதராகவே மாறியுள்ளார். இருந்தும் அவர் தமிழ் உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

csdvsa

 

கும்கி யானையை வைத்து தொழில் செய்யும் மனிதராக வரும் விஷ்ணு விஷால் தனக்கு கொடுத்த பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். படத்துக்கும் அவருக்குமான தொடர்பு பாதியில் துண்டிக்கப்பட்டாலும் இவர்வரும் காட்சிகள் சற்று கலகலப்பாக அமைந்து அயர்ச்சியைத் தவிர்த்துள்ளது. அரசியல்வாதியாக வரும் நடிகர், பழங்குடியின மக்கள், போஸ் வெங்கட், ஸ்ரீநாத், ஆகாஷ் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையை நிறைவாகவே செய்துள்ளனர்.

 

காடுகளின் அழகை நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக்குமார். சாந்தனு மொய்த்ராவின் பின்னணி இசை திரைக்கதைக்குப் பலம் சேர்த்துள்ளது. ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு காடுகளுக்குள்ளேயே பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

vdsb

 

அசாமின் காசியாபாத் மற்றும் கோயம்பத்தூர் வெள்ளியங்கிரி மலையைச் சுற்றி நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 'காடன்' படம் மனிதர்களின் பேராசையால் யானைகளின் வாழ்விடங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன என்பதையும், காடுகள் அழிக்கப்பட்டால் மனித குலத்துக்கு ஏற்படும் விளைவுகளையும் சமரசம் இன்றி காட்டியுள்ளது.

 

காடன் - எச்சரிக்கை மணி!

 

 

Next Story

“பக்கவாதத்திற்கு 70% மற்றும் இறப்பதற்கு 30% வாய்ப்புகளும் இருந்தன...” -நடிகர் ராணா

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

raana

 

 

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராணா, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த பின் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா லீடர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

புதிதாக தொடங்கப்பட்ட ஓடிடி ஒன்றில் சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ராணா கலந்துகொண்ட நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “வாழ்க்கை மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நிறுத்தம் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தன. ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் அடைத்திருந்தது. சிறுநீரகச் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தது. இதனால் 70 சதவீதம் ரத்தக் கசிவுக்கான, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த ஜூலை மாதம் தான் ராணாவுக்கும், மிஹிகா பஜாஜுக்கும் திருமணம் முடிந்தது. இதற்கு நடுவில் ராணா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால், இவை புரளிகள் என ராணா தெளிவுபடுத்தியிருந்தார்.