நடிகை ராதிகாவிற்கு சொந்தமான ராடான் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சித்தி' தொடர், 1999-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இத்தொடரின் இரண்டாம் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், இத்தொடரில் இருந்து தான் விலகுவதாக நடிகை ராதிகா சரத்குமார் தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “‘சித்தி 2' மற்றும் பிற மெகா தொடர்களிலிருந்து விலகுவதால் மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். எனது சிறப்பான வருடங்களையும், கடின உழைப்பையும் சன் டிவியில் தந்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களிடம் இருந்து விடைபெறுவது வருத்தமளிக்கிறது. நிகழ்ச்சி தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள். என் ரசிகர்களின் அளவற்ற அன்பு மற்றும் விஸ்வாசத்திற்கு நன்றி. தொடர்ந்து 'சித்தி 2'வைப் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் நடிகர் சரத்குமாருடன் இணைந்து அரசியலில் முழுக் கவனம் செலுத்த ராதிகா திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.