Advertisment

ஏமாற்றப்பட்ட முதிய தம்பதி... நடிகர் மாதவன் கண்டனம்! 

r madhavan

Advertisment

டெல்லியில் காந்தா பிரசாத் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து 'பாபா கா தாபா' என்ற உணவகத்தை நடத்தி வருகின்றனர். முதியவர்களான இவர்கள் இருவரும் வயதான காலத்திலும் இந்த கடையில் உழைத்து அதன்மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், ஊரடங்கிற்குப் பின்னர் இவர்களது கடையில் வியாபாரம் குறைந்துள்ளது. சமைத்த உணவை வாங்க வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால், வருமானமும் ஈட்ட முடியாமல் இந்த தம்பதியினர் தவித்து வந்துள்ளனர். இந்த சூழலில், தங்களது கடையில் வியாபாரம் ஆகாதது குறித்து கண்ணீருடன் இந்த தம்பதியினர் கவுரவ் என்ற யூ -ட்யூபரிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து இந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. முன்னர்போல் அல்லாமல் தற்போது புதிய ஆர்டர்களும் குவியத் தொடங்கியுள்ளதாக மற்றொரு வீடியோவில் மகிழ்ச்சியாகத் தெரிவித்தார் காந்தா பிரசாத். இந்நிலையில், இந்த தம்பதிக்கு உதவும் வகையில், இந்த உணவகத்திலிருந்து உணவை ஆன்லைன் ஆர்டர் மூலம் டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், பெப்ஸி, பேடிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த கடைக்கு உதவிகள் செய்தன. இந்த சூழலில், யூ -ட்யூபர் கவுரவ் தங்களுக்கு வந்த உதவித் தொகை முழுவதையும் தங்களுக்குத் தராமல் ஏமாற்றுவதாக 'பாபா கா தாபா' உரிமையாளர் காந்தா பிரசாத் மால்வியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

"எனக்கு இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை; பெரும்பாலான மக்கள் செல்ஃபி எடுக்க இங்கு வருகிறார்கள்… முன்பு நான் ஒரு நாளைக்கு ரூ. 10,000க்கு மேல் சம்பாதித்து வந்தேன், இப்போது அது ரூ.3,000-ரூ.5,000 தான் வருமானம் வருகிறது. கவுரவிடம் இருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மட்டுமே பெற்றுள்ளேன். வேண்டுமென்றே தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தினரின் வங்கி விவரங்களைப் பகிர்ந்து அதன் மூலம் சவுரவ் நன்கொடையாக வந்த தொகையில் ஒரு பெரிய தொகையை எடுத்துவிட்டார்" என காந்தா பிரசாத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த வாரமே இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், யூ -ட்யூபர் கவுரவ் தனது வங்கிக் கணக்கில் வந்த தொகை குறித்த விவரங்களைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தற்போது இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடிகர் மாதவனும் இதுதொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “டெல்லியைச் சேர்ந்த பாபா கா தாபா உணவகத்தில் வயதான உரிமையாளர் ஏமாற்றப்படிருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் தான் மக்கள் நல்லது செய்ய முன்வர மறுக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த மோசடிக்கார ஜோடி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும். டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe