Skip to main content

மக்களுக்கு பிடிக்காம போறதுக்கு முன்னால நிறுத்திடனும்னுதான் அந்த முடிவை எடுத்தேன்” - ஆர்.ஜே.பாலாஜி 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

RJ Balaji

 

இந்தியில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த பதாய் ஹோ திரைப்படம் வீட்டுல விஷேசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, கே.பி.எஸ் லலிதா, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ளனர். இப்படம் ஜுன் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஆர்.ஜே.பாலாஜியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் வீட்டுல விஷேசம் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”வீட்ல விஷேசம் எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய வகையில் நல்ல படமாக வந்துள்ளது. மலையாளத்தில் வந்த ப்ரோ டாடிக்கும் இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கே.பி.எஸ் லலிதா, சத்யராஜ், ஊர்வசி என பெரிய லெஜண்ட்ரி  நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நடித்ததே எனக்கு பெரிய ப்ளசிங்தான். 

 

படத்தில் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்தியில் நடித்த பாட்டி, நடிப்பிற்காக தேசிய விருதெல்லாம் வென்றது. அந்த அளவிற்கு அந்தக் கேரக்டர் பவர்புல்லாக இருக்கும். அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க கடைசியாக எங்களுக்கு கிடைத்த நடிகைதான் கே.பி.எஸ். லலிதா. அவர் தற்போது உயிரோடு இல்லை. இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேலாக அவர் நடித்திருக்கிறார். ஆனால், அவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இந்தப் படம் மாறியிருக்கிறது. 

 

சினிமாவில் இந்த இடத்திற்கு வருவேன் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. எதைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அவ்வளவுதான். நல்லபடியாக வேலை செய்தால் மற்ற அனைத்துமே தானாக நடக்கும். நான் பண்ணிய காமெடி எனக்கே பிடிக்கவில்லை. அதனால்தான் படம் இயக்க ஆரம்பித்துவிட்டேன். நானும் ரவுடி தான், தேவி என ஒரு சில படங்கள் தவிர்த்து நிறைய படங்களில் என்னுடைய காமெடி பிடிக்கவில்லை. எனக்கு பிடிக்காததை தொடர்ந்து செய்யும்போது, ஒருகட்டத்தில் அது மக்களுக்கும் பிடிக்காமல் போய்விடும். அதனால்தான் நிறுத்திவிட்டேன். மற்றவர்கள் நமக்கு சரியாக எழுதவில்லை. நாமளே நமக்கு எழுதிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து படங்கள் இயக்க ஆரம்பித்துவிட்டேன். ஜுன் 17ஆம் தேதி வீட்டுல விஷேசம் படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்”.

 

 

சார்ந்த செய்திகள்