/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/56_69.jpg)
பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பி.வாசு, லாரன்ஸ், கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது கங்கனா ரணாவத் பேசுகையில், ''நான் முதன்முதலாக 'சந்திரமுகி 2' என்ற காமெடி ஹாரர் படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இந்தி பதிப்பில் நான் டப்பிங் பேசி இருக்கிறேன். டப்பிங் பேசும்போது கடினமாகவும், சவாலாகவும் இருந்தது. குறிப்பாக லக லக லக பேசும்போது. இந்தப் படத்தில் நடனம் ஆடி இருக்கிறேன். பேயாகவும் நடித்திருக்கிறேன். தென்னிந்தியாவை பொறுத்தவரை எனக்கு ரச சாதம் மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் சில குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும். ஜோக்குகள், குட்டிக்கதை என சொல்லி கலகலப்பாக வைத்திருப்பார். இந்தப் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். மறக்க இயலாது '' என்றார்.
இயக்குநர் பி வாசு பேசுகையில், '' தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களைத்தான் என்னுடைய குடும்பமாக கருதுகிறேன். இந்த படம் வெற்றி அடையும் போது 50 சதவீதம் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், 50 சதவீதம் நடிகர் நடிகைகளுக்கும் அந்த வெற்றி சேரும். என்னிடம் அடிக்கடி வளர்ந்து விட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குநர் இல்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.
அதே போல் தான் நான் இயக்குநராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ் என்னிடம், 'நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்' என்பார். நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குநராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி.. நல்ல செயல்களை செய்து.. அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அவருடைய முயற்சியில்.. அவருடைய உழைப்பில்.. இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.
இன்னொரு விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்... விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)