/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/320_50.jpg)
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கியுள்ள நிலையில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் பி.வாசு பேசுகையில், “நானும், கவுண்டமணியும் இணைந்து பணியாற்றிய பல படங்களின் வெற்றி விழாவில் சந்தித்திருக்கிறோம். ஆனால் முதல்முறையாக அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' பட விழாவில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் ராஜகோபாலுக்கும், தயாரிப்பாளர் ரவி ராஜாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கவுண்டமணியின் காமெடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அவரை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய முதல் நன்றி. கவுண்டமணியை பற்றி சொல்வதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. முதலில் அவருக்கு மேனேஜர் என்று யாரும் கிடையாது. அவரிடம் டிரைவரும் கிடையாது. அவரிடம் டைரியும் கிடையாது. அனைத்தையும் மனதில் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வார். இதைப் போன்ற எளிமையான, கவுண்டமணி அதிகம் நடித்தது என்னுடைய இயக்கத்தில் உருவான படங்களில் தான். இதுவரை 24 படத்தில் நானும் அவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அந்த 24 படங்களில் 20 படங்கள் ஹிட்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/321_39.jpg)
பின்னணி இசை அமைக்கும் போது இளையராஜா கவுண்டமணியின் வசனங்களை கேட்டும் நடிப்பை பார்த்தும் ரசிச்சு சிரிப்பார். அவர் கவுண்டமணியின் மிக தீவிரமான ரசிகர். சிவாஜி ஒரு முறை என்னிடம், 'கவுண்டமணி போன்ற நடிகர்கள் நம்மிடம் இருப்பது நாம் செய்த பாக்கியம் என சொல்லியிருக்கிறார். தமிழ் திரையுவகில் உள்ள பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கவுண்டமணியின் ரசிகர்கள் தான். மொழி தெரியாத நபர்களையும் சிரிக்க வைக்க கூடியவர் கவுண்டமணி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)