p.vasu about chandramukhi 2

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக 'ஸ்வாகதாஞ்சலி' மற்றும் 'மோருனியே' பாடல் வெளியான நிலையில் நேற்று அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. இவ்விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

இயக்குநர் பி. வாசு பேசுகையில், '' நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ...! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்... இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.

Advertisment

இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரைகாணும் போது இவர்களுடன் எப்படிப் போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது. இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.

ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார். அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்கள்நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்" என்றார்.