புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் கடந்த 5ஆம் பிரம்மாண்டமாக வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க பின்னணி இசையில் சாம் சி.எஸ் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 621 கோடிக்கு மேல் வசூலித்தாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் சிறப்புக் காட்சிக்கு தெலுங்கானா அரசு அறிவித்திருந்த நிலையில், சிறப்புக் காட்சியைக் காண பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். அந்த வகையில் ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் படத்தைக் காண அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் அவரை காண சூழ்ந்தனர். அக்கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக புஷ்பா 2 படக்குழு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவித்தது. இதையடுத்து அல்லு அர்ஜூன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து ரூ.25 லட்சம் இழப்பீடு தரவுள்ளதாகக் கூறினார்.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மூன்று நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த திரையரங்க உரிமையாளர் சந்தீப், திரையரங்க மேலாளர் நாக ராஜூ, பால்கனி மேற்பார்வையாளர் என்.விஜய சந்தர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Published on 09/12/2024 | Edited on 09/12/2024