இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுக்கால திரை பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கூலி படம் நேற்று முன் தினமான 14ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாளில் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூர் லுலு மாலில் உள்ள சினி போலீஸ் திரையரங்கில் சிறப்புக் காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் வா. புகழேந்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணா, காவல்துறை அதிகாரி மகானந்த், தொழிலதிபர் உப்பிலியப்பன், மோகன்ராஜ் ஐ.ஏ.எஸ்., வணிக வரித்துறை இணை ஆணையாளர் ரமேஷ் குமார், திரைப்பட இயக்குநர் நாராயண், கே. குமார் மற்றும் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் எனக் கலந்து கொண்டு திரைப்படத்தைப் பார்த்தனர். அதன் பின்னர் கூலி படத்தைப் பாராட்டி பேட்டி அளித்தனர்.