PT selvakumar interview about vijay & ajith

Advertisment

நடிகர் விஜய் உடன் பல ஆண்டு காலம் இருந்த, அவருடைய முன்னாள் பி.ஆர்.ஓ பி.டி. செல்வகுமார் திரையுலகில் தன்னுடைய பல்வேறு அனுபவங்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

விஜய்யோடு 25 ஆண்டுகள் பணிபுரிந்த நீங்கள் அவருடைய சமகாலப் போட்டியாளரான அஜித்துடன் 'ஆழ்வார்' படத்திலும் பணிபுரிந்தீர்கள். எப்படி அது நடந்தது?

"இவர் விஜய் ஆளு" என்கிற முத்திரை என் மேல் விழுந்திருந்த நேரம் அது. விஜய் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நான் கவனித்து வந்தேன். 'ஆழ்வார்' படத்தின் தயாரிப்பாளருக்கு நான் நீண்டகாலமாக பி.ஆர்.ஓ-வாக இருந்தேன். ஆழ்வார் பட வாய்ப்பு வந்தபோது அவரிடம் "இது சாத்தியமா? அஜித் அனுமதிப்பாரா?" என்றேன். ஆனாலும் என்னை அந்தப் படத்தின் பிஆர்ஓ ஆக்கினார்கள். அஜித் என்ன சொல்வாரோ என்கிற பதற்றம் எனக்கு இருந்தது. ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொண்டார். அதுதான் அவரின் பெருந்தன்மை. விஜய்யிடம் இதுகுறித்து தவறாகச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த பலர் முயன்றனர். ஆனால் விஜய்யும் உண்மை நிலையைப் புரிந்துகொண்டார்.

Advertisment

ஆழ்வார் படத்தில் பணிபுரியும் போது அஜித்தோடு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் என்ன?

அஜித் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். கடுமையான உழைப்பாளி. அடுத்தவர் வேலையில் தலையிடமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். மிகுந்த துணிச்சல்காரர் அஜித்.

விஜய் -அஜித் இருவருடைய நட்பு எப்படிப்பட்டது?

ஆரம்பத்தில் இருவருக்கும் மனத்தாங்கல்கள் இருந்தன. அதன் பிறகு இருவரும் பரஸ்பரம் ஒருவருடைய நிகழ்வுக்கு இன்னொருவர் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அதன் மூலம் ஒரு நட்பு இருவருக்கும் உருவானது. இருவருக்குமே நம்பர் ஒன்னாக வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்குமே தவிர, ஒருவர் பற்றி இன்னொருவர் குறை கூற மாட்டார்கள்.

Advertisment

விஜயகாந்த்தோடு உங்களுடைய அறிமுகம், அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து...

விஜயகாந்த் ஒரு அபூர்வமான மனிதர். அவருடைய உழைப்பு அசுரத்தனமானது. ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றுவார். அதனால் அவருடைய உடலை அவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. திருமண உதவிக்காக ஒருவரை அழைத்துச் சென்றபோது யோசிக்காமல் உடனடியாக 2 லட்சம் கொடுத்தார். தங்கமான மனிதன். அனைவரோடும் உரிமையுடன் பழகுவார்.

சூர்யாவோடு நீங்கள் பல படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் அவருக்கான சூழல் சரியாக இல்லை. ஆனால் முன்னணி நடிகராக வருவதற்கு அவர் அப்போதிலிருந்தே கடுமையாக உழைத்தார். நான் விஜய்யுடன் இருப்பதால் சூர்யாவுக்காக எப்படி பணியாற்றுவேன் என்கிற சந்தேகம் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இருந்தது. ஆனால் அவருக்காகவும் நான் சிறப்பாகப் பணியாற்றி அவர்களுடைய பாராட்டுகளைப் பெற்றேன். கஜினி படத்தின் போது நான் ஒரு சரியான பிஆர்ஓ என்று சூர்யாவே சொல்லியிருக்கிறார்.