கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியான படம் தெலுங்கு படம் ‘கிங்டம்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான், ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கிங்டம் படத்தில் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் கிங்டம் படத்தை திரையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனவும் அதனை தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமெனவும் எச்சரித்திருந்தார். அதன்படி நாம் தமிழர் கட்சியினர் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, அப்பகுதியில் இருக்கும் ஒரு திரையரங்கில் கிங்டம் பட பேனரை கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவ, பின்பு காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் சிறு வாக்குவாதமும் தள்ளு முள்ளும் நடைபெற்றது. பின்பு காவல் துறையினர் போராட்டம் செய்தவர்களை கைது செய்தனர். 

Advertisment