thanu

Advertisment

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தயாரிப்பாளர் தாணு கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமான இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவலின் வேகம் சற்று குறையத் தொடங்கியதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் திரையங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்கி வருகின்றன. வரும் பொங்கல் தினத்தையொட்டி முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்குகளை முழுமையாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரைத்துறையினர் சார்பில் முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, அதற்கான அனுமதியை வழங்கி அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த முடிவிற்குமத்திய உள்துறைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக அரசு உத்தரவைத் திரும்பப்பெற்றது.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவரான தயாரிப்பாளர் தாணு கடிதமொன்றை எழுதியுள்ளார். இரு பக்க அளவுள்ள அக்கடிதத்தில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள தாணு, 'குறைந்தபட்சம் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற விடுமுறை நாட்களிலாவது 100 சதவீத அனுமதி வேண்டும். அவ்வாறு அனுமதித்தால், பாதிப்பில் முடங்கியிருக்கும் திரைத்துறை மீள உதவியாய் இருக்கும்' என்றுகுறிப்பிட்டுள்ளார்.