Skip to main content

“பாழாப்போன அரசியல் இப்படி பார்க்க வைத்துவிட்டதே” - கலங்கிய தயாரிப்பாளர்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
producer suresh kamatchi about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒரு ரசிகர் விஜயகாந்த்திற்குத் தனது உறுப்புகளைத் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் திரைப் பிரபலங்களும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடையில் நாற்காலியில் அமர்ந்த அவர் திடீரென்று சரிந்து விழப் பார்த்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பதறியடித்தபடி அவரைப் பிடித்து உட்கார வைத்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வேதனையடைந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜயகாந்த் உடல் நலம் குறித்து எக்ஸ் தளத்தில் மனம் திறந்துள்ளார். அந்தப் பதிவில், “கேப்டன்... ஆரம்பத்துல எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணவங்க... பின்னர்தான் புரிந்துகொண்டனர். அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களை சரிசெய்தவர் என்று. அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது அச்சங்கத்தை தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர். சொன்னதை செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். 

நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்றபோது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க ‘சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா?  நாமும் ஏறிக்கொள்வோம்’ என பேருந்துகள் நிறைந்தன. இதன் பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறந் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், ‘நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க’ என சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு’ என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ, நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சுமூகமாக அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார். தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர். நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர். படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் சமமான, தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன். எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்தபோது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டவர். 

காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000  நடிகர்களை ஒன்று திரட்டி போராடியவர். அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்... தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார். உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாக கர்ஜிக்க வந்துவிடுவார் என்று. ஆனால் சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மை பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன். 

தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்தபோது நெஞ்சே உடைந்துவிட்டது. மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்?  என குமைந்து போனேன். இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல. இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை. கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.