
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் ‘கஜானா’. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இப்படம் வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் டி கிரியேஷன்ஸ் சார்பில் திருமலை படத்தை வெளியிடுகிறார். படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதிழயகண், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் யோகி பாபுவை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, “யோகி பாபு நிகழ்ச்சிக்கு வரவில்லை. அப்போ ரூ.7 லட்சம் அவருக்கு போகவில்லை என்று அர்த்தம். அந்த பணம் கொடுத்திருந்தால் கண்டிப்பா அவர் இங்கு வந்திருப்பார். இது எவ்ளோ பெரிய கேவலமான விஷயம். ஒவ்வொரு படமும் ஒரு நடிகனுக்கு குழந்தை மாதிரி. அந்த குழந்தையை வளர்த்தெடுக்க பொறுப்பு வேண்டும். அது இல்லையென்று சொன்னால் நடிகனாக இருக்கவே நீ லாயக்கில்லை. ஒரு புரொமோஷனுக்கு வரமாட்டிங்கலா. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும்” என்றார்.