Skip to main content

மேடையில் உதயநிதி ஓபனாக சொன்னாரே, அதுதான் சினிமா” - தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Producer Dhananjayan

 

தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் எனப் பன்முகம் கொண்ட தனஞ்செயனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் அண்மையில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”கரோனா லாக்டவுனுக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் மாறியுள்ளது. இதுவரை பார்க்காத அளவிற்கு உலக சினிமாவை ரசிகர்கள் பார்த்துள்ளனர். வீட்டிலிருந்தே உலக சினிமா, உலக வெப்சீரிஸை பார்ப்பதற்கான வாய்ப்பு உருவாகிவிட்டது. அதனால் ரசிகர்களின் சினிமா அறிவு அதிகமாகிவிட்டது. அது சினிமா எடுப்பவர்களுக்கு பெரிய சவாலாகியுள்ளது. இனிவரும் காலங்களில் வழக்கமான படங்களை எடுத்தால் நம்மால் வெற்றிபெற முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. விக்ரம் படம் இவ்வளவு பெரிய வெற்றிபெற்றதற்கான காரணம் அது வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் இல்லாமல் புது உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. 

 

ஆடியன்ஸ் ரசனை இப்படித்தான் இருக்கும், இந்தப் படம் ஜெயிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. விக்ரம் படத்தை எம்.ஜி. முறையில் கேட்டிருந்தார்கள். ஆனால், நாங்கள் டிஸ்ட்ரிப்யூஷன் முறையில்தான் வாங்கினோம். எம்.ஜி.யில் வாங்யிருந்தால் நாங்கள் நிறைய சம்பாதித்திருப்போம் என்று உதயநிதி சார் ஓபனாக சொன்னார். இதுதான் சினிமா. எந்தப் படம் ப்ளாக்பஸ்டராகும் என்று நம்மால் கணிக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக விக்ரம் மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

 

நடிகர்களின் சம்பளம் அதிகரிப்பதற்கு தயாரிப்பாளர்கள்தான் காரணம். அவர்கள் அதிகமாக தர தயாராக இருக்கும்போது எந்த நடிகர் வேண்டாம் என்று கூறுவார். இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவின் அடுத்த பரிமாணம் பிரம்மாண்டம்தான். இனி எல்லா இயக்குநர்களும் அதை நோக்கி பயணிக்க ஆரம்பிப்பார்கள். அதன் மூலம்,.தமிழ் மட்டுமல்லாது எல்லா மொழிகளிலும் தமிழ் சினிமாவிற்கு ஒரு மார்க்கெட் உருவாகும். அது சினிமாவுக்கு நல்லதுதான். 

 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்தால் அடுத்தடுத்து நிறைய வரலாற்று படங்கள் வரலாம். அதே நேரத்தில் சின்ன படங்களும் வரும். ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அனைத்து மொழிகளுக்கான பிரம்மாண்ட படங்களாகத்தான் இருக்கும். 

 

மலையாள பட மார்க்கெட் சிறியது என்பதால்தான் காலங்காலமாக அவர்கள் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கிறார்கள். அதனால் அவர்களுடைய இயக்குநர்கள் சிறிய அளவில் எழுதியே பழகிவிட்டார்கள். ஆனால், தமிழ் சினிமா மார்க்கெட் அப்படி அல்ல. அதனால் அவர்களைப் பார்த்து நாம் படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காக அவர்கள் பெரிய படங்களை விரும்பமாட்டார்கள் என்ற அர்த்தம் இல்லை. விக்ரம், மாஸ்டர், ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் படங்கள் கேரளாவில் பெரிய அளவில் வெற்றிபெற்றன. எல்லா மொழி படங்களையும் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டதால் இனி ரீமேக் செய்யவேண்டுமா என்ற எண்ணம்தான் தயாரிப்பாளர்களிடம் உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரீமேக் செய்ய முடியாத சூழல் உருவாகும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்