
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதற்கிடையே வரும் ஜூன் 21- ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறுவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இதற்குத் திரையுலகில் பலரும் எதிர்மறை கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்...
"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 - 2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் 16- ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில், கரோனா வைரஸ் (COVID - 19) மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதைக் கருத்தில் கொண்டும், மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், மேற்படி சங்கத்தின் தேர்தலை ஏற்கனவே அறிவித்த தேதியில் நடத்த இயலாத சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை வரவிருக்கும் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.