/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/73_25.jpg)
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மஹா’. இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும். இப்படத்தில் நடிகர் சிம்பு கௌரவத் தோற்றத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த இயக்குநர் ஜமீல், படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகார் மனுவில், ‘மஹா’ படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் எஞ்சியுள்ள நிலையில், எனக்குத் தெரியாமலேயே எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு உள்ளிட்ட பின்தயாரிப்பு பணிகளை தயாரிப்பாளர் நிறைவு செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், ‘மஹா’ படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் மதியழகன் இதுகுறித்து விளக்கமளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மஹா’ படத்திற்கு தற்போதுவரை எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ‘மஹா’ படத்தின் வெளியீட்டிற்கு கூடுதல் காலமெடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ள மதியழகன், தற்போதைய நிலையை சிம்பு, ஹன்சிகா ரசிகர்கள் புரிந்துகொள்ளும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)