Skip to main content

ஆளுநரை சந்தித்த தமிழ் திரைப்பட துறையினர் 

Published on 02/05/2018 | Edited on 03/05/2018
vishal


தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வந்த நிலையில்,  நடிகர் ,நடிகைகள் மற்றும் மொத்த சினிமா துறையினரும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் சென்னையில் மவுன போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமையை மீட்க வேண்டும் என்றும், மேலும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு திரை உலகினர் அதில் கையெழுத்து போட்டு இருந்தனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நடிகர்கள் விஷால், நாசர், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பொன்வண்ணன், விக்ரமன் உள்ளிட்டோர் இன்று கவர்னர் மாளிகை சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கவர்னரிடம் கொடுத்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் இது குறித்து இவர்கள் பேசியபோது...."காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் மனுவில் ரஜினி, கமல், விஜய் உள்பட திரை உலகைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு இருந்தனர். அந்த மனுவை ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று கவர்னரிடம் கொடுத்தோம். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இன்னும் இரண்டு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மனுவின் நகல் முதல்அமைச்சருக்கு அனுப்பப்படும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வற்புறுத்தினோம். மனுவிலும் அதை குறிப்பிட்டுள்ளோம். இதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் கூறினார்" என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

"இது திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ghgh

 

 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா சார்ந்த அனைத்து வேலைகளும் மத்திய அரசின் உத்தரவின் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் ஆரம்பமானது. இருந்தும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வரும் நிலையில் தியேட்டர் அதிபர்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்...

 

"தமிழ்நாடு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது ரிலீசுக்காக காத்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்குகிறது. அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 30 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளது.

 

 

Next Story

நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழ் பட இயக்குனர்கள்!

Published on 31/10/2019 | Edited on 01/11/2019

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது... 

 

ns

 

''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

 

 

மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.